Takkar Movie Review


கரோனா காலகட்டத்துக்கு முன்பே எடுக்கப்பட்டு நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையரங்குகளில் வெளியாகியுள்ள ‘டக்கர்’ திரைப்படம் பார்வையாளர்களின் மனங்களை டக்கராக கவர்ந்ததா என்பதைப் பார்க்கலாம்.

தன் குடும்ப நிலையை எண்ணி தினம் தினம் வெதும்பும் கிராமத்து இளைஞன் குணா (சித்தார்த்). வாழ்க்கையில் எப்படியாவது பணக்காரன் ஆகிவிடவேண்டும் என்று தன் தாயிடம் சபதம் ஏற்று சென்னைக்கு வருகிறார். சினிமா, பார், ஜிம் என சின்ன சின்ன வேலைகள் செய்யும் அவருக்கு எல்லா இடங்களிலும் சுயமரியாதைக்கு இழுக்கு ஏற்படுவதால் அவரால் எந்த வேலையிலும் நீடிக்க முடிவதில்லை. ஒருவழியாக சீன கேங்ஸ்டர் ஒருவரின் சொகுசு கார் டாக்ஸி கம்பெனியில் வேலைக்கு சேர்ந்து பென்ஸ் கார் ஓட்டுகிறார்.

இன்னொரு பக்கம், இளம்பெண்களை கடத்தி அவர்களின் பெற்றோரிடம் பேரம் பேசும் வில்லன் ராஸ் (அபிமன்யு சிங்). பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை என்று நம்பும் கோடீஸ்வர ஹீரோயின் லக்கியை (திவ்யான்ஷா கவுசிக்) வில்லன் குரூப் கடத்த முயலும்போது யதேச்சையாக சந்திக்கிறார் ஹீரோ. இவர்கள் அனைவரின் வாழ்க்கையில் அதன் பிறகு சில திருப்பங்கள் நிகழ்கின்றன. இறுதியில் ஹீரோவின் லட்சியம் நிறைவேறியதா என்பதே ‘டக்கர்’ சொல்லும் கதை.

படத்தின் ஆரம்ப கிரெடிட்ஸ் திரையில் ஓடத் தொடங்கும்போதே ஹீரோவின் பின்னணி, அவரது நோக்கம் ஆகியவற்றை, பார்க்கும் ஆடியன்ஸின் மனதில் பதிய வைத்து விடுகிறார் இயக்குநர் கார்த்தி ஜி. கிரிஷ். படம் எதை நோக்கி நகரப் போகிறது என்பதற்காக ஆரம்பத்தில் அமைத்த அடித்தளம் அடுத்தடுத்த காட்சிகளில் ஆட்டம் கண்டுவிடுகிறது. அதன்பிறகு ஹீரோவின் நண்பராக வரும் விக்னேஷ் காந்த், யோகிபாபு, சீன கேங்ஸ்டர், பெண்களை கடத்தும் வில்லன் என திக்கு தெரியாமல் முட்டி மோதுகிறது திரைக்கதை. இதனால் படத்தின் ஒரு காட்சி கூட மனதில் ஒட்டவில்லை.


பணம் மட்டுமே வாழ்க்கை vs பணம் மட்டுமே வாழ்க்கை அல்ல என்ற இரண்டு எதிரெதிர் மனநிலையுடன் வாழும் இருவர் சந்திக்கும்போது என்ன நடக்கும் என்ற சுவாரஸ்யமான ஒன்லைனை எடுத்துக் கொண்ட இயக்குநர், அதை திரையில் சுவாரஸ்யமாக காட்ட தவறிவிட்டார் என்றே சொல்லவேண்டும். படத்தின் பிரதான கதையே கிட்டத்தட்ட இடைவேளைக்குப் பிறகுதான் தொடங்குகிறது. ஒரு காட்சியில் ஆக்‌ஷன் ஜானராக தோன்றும் படம், மற்றொரு காட்சியில் காமெடி படமாக மாறுகிறது. உடனடியாக அதற்கு அடுத்தக் காட்சியில் ரொமான்டிக் படமாக பரிணாமம் அடைகிறது. இப்படி மாறிக்கொண்டே இருப்பதால் பார்க்கும் நமக்கு படத்தின் கதாபாத்திரங்களோடு எந்தவித ஒட்டுதலும் ஏற்படவில்லை.


சாக்லேட் பாயாக வலம்வந்து கொண்டிருந்த சித்தார்த் இந்தப் படத்தில் ‘ரக்கட்’ பாயாக ஆக்‌ஷன் அவதாரம் எடுத்திருக்கிறார். நடிப்பை வெளிப்படுத்த பெரிய வாய்ப்பில்லை என்றாலும் தன்னால் முடிந்தவரையில் படத்தை ஒற்றை ஆளாக தாங்குகிறார். படத்தின் தொடக்கத்தில் தாடி மீசையுடன் வரும் கெட்டப்பே அவருக்கு பொருத்தமானதாக இருந்த நிலையில், கெட்டப் சேஞ்ச் என்ற பெயரில் மீசையை மழித்து தாடியை குறுகலாக்கி வைத்திருப்பது எடுபடவில்லை. படம் முழுக்க அவரது முகத்தில் கதாபாத்திரத்தை மீறிய ஒருவித முதிர்ச்சி துருத்திக் கொண்டே இருக்கிறது.

நாயகி திவ்யான்ஷா படம் முழுக்க கவர்ச்சி கலந்த அழகுப் பதுமையாக வந்து செல்கிறார். நடிப்பு சுத்தமாக வரவில்லை. ஆர்.ஜே.விக்னேஷ் காந்த், யோகிபாபு இருவரும் ஆடியன்ஸுக்கு சிரிப்பே வந்துவிடக் கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டு காமெடி (?) செய்கிறார்கள். தியேட்டரில் கப்சிப். இரண்டாம் பாதியில் முனீஸ்காந்த் வரும் காட்சிகள் மட்டுமே சற்று சிரிப்பை வரவழைக்கின்றன. மோசமாக எழுதபட்ட வில்லன் கதாபாத்திரத்தில் அபிமன்யு சிங் வீணடிக்கப்பட்டிருக்கிறார்.

நிவாஸ் கே.பிரசன்னா இசையில் கரோனா காலக்கட்டத்தில் ஹிட்டடித்த ‘நிரா நிரா’ பாடல் மட்டுமே கேட்கும்படி இருக்கிறது. மற்ற பாடல்கள் காட்சி வழியாகவும், செவி வழியாகவும் ஈர்க்க தவறுகின்றன. பின்னணி இசையும் படத்தை தூக்கி நிறுத்த உதவவில்லை. படத்தின் சேஸிங் காட்சிகளில் கேமராதான் முன்னும் பின்னும் ஆடுகிறதே தவிர பார்க்கும் நமக்கு ஒரு சின்ன சலனம் கூட இல்லை. மாறாக குழப்பமே மேலிடுகிறது.

ஒரு சுவாரஸ்யமான ஒன்லைனை எடுத்துக்கொண்டு அதற்கான திரைக்கதையில் மெனக்கெடாமல் பலவீனமான காட்சிகளால் பூசி மொழுகப்பட்ட ‘டக்கர்’ விரைவில் மறக்கப்படக் கூடிய மற்றொரு தமிழ்ப் படம் அவ்வளவே.

TAKKAR CINEWOODS  RATING : 3 / 5



 

About Cinewoods

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 Comments:

Post a Comment